AWARD RECIPIENTS FOR 2009 Lifetime Achievement Award Recipient Kovai Gnani
இயல் விருது கோவை ஞானி
கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி.பழனிச்சாமி ஒரு தமிழாசிரியர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வருகிறார். இவரை "இடைவிடாது இயங்கிவரும் ஆய்வு அறிஞர் ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது" என்று வர்ணிப்பார்கள். தமிழின் நவீன இலக்கியங்களை மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். நுட்பமான இலக்கிய உணர்வும், நவீன இலக்கியங்களை, திறந்த மனத்துடன் அணுகும் பண்பும் கொண்டவர். இவர் ‘நிகழ்’ என்ற சிற்றிதழை பல ஆண்டுகளாக தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக நடத்தி வந்தார். இதுவரை 24 திறனாய்வு நூல்களையும் 12 தொகுப்பு நூல்களையும் 4 கட்டுரை தொகுதிகளையும் இரண்டு கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். இதுதவிர தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
இவர் எழுதிய புத்தகங்களில் "இந்தியாவில் தத்துவம், கலாச்சாரம்" "கடவுள் ஏன் இன்னனும் சாகவில்லை" "தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்" "மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்" ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவருடைய நீண்ட கால தமிழ் சேவைக்காக "விளக்கு விருது", "தமிழ் தேசியச் செம்மல் விருது", "தமிழ் தேசியத் திறனாய்வு விருது", "பாரதி விருது" ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக திரு கோவை ஞானி அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2009ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.